மியூச்சுவல் ஃபண்டில் குறைவான லாபம் வந்தாலும் ரிஸ்க் ஆனது மிகக்குறைவாக இருக்கும். ஆனால் பங்குச்சந்தையை பொருத்தவரையில் லாபம் என்பது கணக்கிட முடியாததாக இருக்கும் அதே நேரத்தில் இழப்பு ஏற்பட்டால் சற்று அதிகமாகவே இருக்கும்.
நீங்கள் எந்த ஒரு வேலையைச் செய்து வந்தாலும் அதில் வரும் வருமானம் பற்றாமலும் அல்லது சற்று கூடுதல் வருமானம் எடுக்கும் நோக்கத்திலும் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் நீங்கள் முதலீடுசெய்வது மிகச் சிறந்ததாகும் மற்றும் நல்ல லாபம் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் முதன்முதலில் இவற்றில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக இந்தப் பதிவை முழுவதும் படித்துத் தெரிந்து கொண்ட பின்பு நீங்கள் சரியான முடிவை எடுத்தால் உங்களது பணம் பாதுகாப்பாகவும் மற்றும் நல்ல லாபத்தையும் கொடுக்கும்.
முதல் முறை முதலீடு செய்கிறீர்களா!
நீங்கள் முதன்முறை முதலீடு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அதற்கு முன்பு நீங்கள் எங்கு முதலீடு செய்தால் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதனை முன்கூட்டியே கருத்தில்கொண்டு, அதன்படி நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். ஆரம்ப கட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக ரிஸ்க் குறைவாக இருக்கக் கூடியதை தேர்வு செய்வது மிகச் சிறப்பானதாக இருக்கும். ஏனென்றால் தொடக்கத்திலேயே அதிக ரிஸ்க்உள்ளதை தேர்வு செய்யும்பொழுது இழப்பு ஏற்பட்டு விட்டால், உடனே அந்த முதலீட்டை விட்டு அவர்கள் முழுவதுமாக வெளியேறி விடுவார்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் ஆக இருந்தாலும் சரி அல்லது பங்குத்தந்தையாக இருந்தாலும் சரி அவை அனைத்துமே அன்றாடம் நடக்கும் செய்திகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பொருளாதார மாற்றங்களின் அடிப்படையில் லாப நஷ்டங்களைக் கொடுக்கக் கூடியதாகும். இதன் காரணமாக நீங்கள் முதன்முதலில் முதலீடு செய்யும்பொழுது குறைவாக ரிஸ்க் இருப்பதை தேர்வுசெய்து அவற்றில் ஆறு மாதத்திலிருந்து இரண்டு வருடங்கள்வரை முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.
பங்குச்சந்தையில் அனுபவம் உள்ளவரா நீங்கள்!
பங்குச் சந்தையில் இருக்கும் ஒரு நிறுவனம் எதன் அடிப்படையில் ஒவ்வொரு நாளும் நகர்கிறது என்பதை நீங்கள் தெளிவாக அறிய கூடியவராக இருந்தால் நீங்கள் நேரடியாகப் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். ஏனென்றால் முதன் முதலில் முதலீடு செய்ய வருபவர்கள் ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது பங்குச்சந்தையை பற்றியோ போதுமான அறிவு இல்லாமல் வருவார்கள். இதனால் அவர்கள் திடீரென்று ஒரு நிறுவனத்தின் விலை ஏறுகிறது என்றால் அவற்றில் அவர்கள் முதலீடு செய்து விடுவார்கள். ஆனால் எதன் அடிப்படையில் அதன் விலையில் மாற்றம் ஏற்பட்டது என்பதனை அவர்கள் தெரிந்து கொள்ளாமல் செயல்படும் தருவாயில் அவர்களுக்கு அது மிகப்பெரிய ரிஸ்க்கை கொடுக்கக் கூடியதாக இருக்கும்.
பங்கு சந்தை VS மியூச்சுவல் ஃபண்ட் |
பங்குச் சந்தையா?, மியூச்சுவல் ஃபண்டா?
பங்குச் சந்தை கட்டணங்கள்:
பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் முதலில் நீங்கள் டீமேட் கணக்கைத் திறக்க வேண்டும். டீமேட் கணக்கு திறப்பதற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். அதன் பிறகு ஆண்டு தோறும்AMC கட்டணங்களைச் செலுத்த வேண்டும். மேலும் பங்குச்சந்தையில் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு டிரேடிங் மற்றும் முதலீடுகளுக்கு நீங்கள் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும். புதிதாக வந்தவர் என்றால் நீங்கள் நிச்சயமாக இந்தக் கட்டணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
எப்படி முதலீடு செய்வது?
பங்குச்சந்தையில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 20 முதல் 50 நிறுவனங்களைத் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்துள்ள அந்த நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு ஏற்றச் சிறந்த 3 அல்லது 5 நிறுவனங்களை மட்டும் பிரித்து எடுக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் சிறந்த நிறுவனத்தைத் தேர்வு செய்வதற்கு நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள் மற்றும் எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்கிறீர்கள் என்பதனை வைத்து உங்களுக்கு ஏற்ற நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு செய்து வைத்திருக்கும் அந்த நிறுவனங்களைப் பற்றி வரக்கூடிய செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் படித்துத் தெரிந்து கொண்டு அந்த நிறுவனங்களின் உண்மைத்தன்மையை அறிய வேண்டும். ஒரு நிறுவனத்தின் வரவுச் செலவுக் கணக்குகள் மற்றும் அந்த நிறுவனங்கள் அடுத்தடுத்து செய்யக்கூடிய புதிய வேலைகள் ஆகியவற்றை நீங்கள் அடிப்படையாக வைத்துக்கொண்டு அவற்றில் முதலீடு செய்ய வேண்டும்.
பங்குச் சந்தையின் நன்மைகள்:
- உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் உள்ளது என்றால் அவற்றைப் பிரித்துத் தனித்தனியாகப் பல நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியும்.
- உங்களது முதலீட்டு கால அளவை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
- எந்த நேரத்தில் வாங்க வேண்டும் எந்த நேரத்தில் விற்க வேண்டும் என்ற முடிவினை நீங்களே எடுக்க முடியும்.
- நீங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனத்திற்கு அடுத்தடுத்து அதிக வருமானம் கிடைத்து கொண்டு இருக்கிறது என்றால், அந்த நிறுவனத்திற்கு இன்னும் அதிகமான முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வருவார்கள். இதனால் அந்த நிறுவனத்தின் பங்கின் விலை பலமடங்கு அதிகரிக்கும். அதனால் மிகக் குறுகிய காலத்தில் உங்களுக்கு அதிக வருமானம் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
- நீங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனம் தொடர்ச்சியாக நஷ்டத்தைச் சந்தித்து கொண்டு இருக்கிறது என்றால், அவற்றில் உள்ள உங்களது பங்குகளை விற்றுவிட்டு மற்ற நிறுவனத்தில் முதலீடு செய்து கொள்ள முடியும்.
பங்குச்சந்தையில் உள்ள கெடுதல்கள்:
- ஒரு பங்கை வாங்கும் போதும் விற்கும் போதும் அதற்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
- உங்களது புரோக்கருக்கு AMC என்ற ஆண்டு பராமரிப்பு கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
- நீங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனம் பெரிய இழப்பைச் சந்திக்கும் போகிறது உங்களுக்கும் பெரிய இழப்பு ஏற்படும்.
- பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு நீங்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கித் முதலீடு செய்யக்கூடிய நிறுவனங்களைப் பற்றிப் பகுப்பாய்வு செய்ய வேண்டியிருக்கும்.
- ஒரு சில கடுமையான நாட்களில் நீங்கள் மிகக் கவனமாக மற்றும் உங்களின் முதலீட்டை நினைத்துப் பயத்துடனும் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
- தனிமனிதராக நீங்கள் முதலீடு செய்யும்பொழுது நீங்கள் செய்துள்ள அந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மட்டும் இழப்பைச் சந்திக்கும்பொழுது உங்களுக்கு அது பெரும் கஷ்டமாக இருக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்:
மியூச்சுவல் ஃபண்ட் நன்மைகள்:
- எந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்கின்ற பயம் ஏற்படாது.
- உங்களை நினைத்து ஒவ்வொரு நாளும் நீங்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை.
- பண்டு மேலாளரை வைத்து அதிக லாபம் கொடுக்கக்கூடிய பல நிறுவனங்களை மிகச்சிறப்பாகக் கண்டறிந்து அவற்றில் அவர்கள் முதலீடு செய்வார்கள்.
- பங்குச்சந்தையில் இருக்கக்கூடிய எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவற்றில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் 10% மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும். இதனால் அந்த நிறுவனத்தில் இழப்பு ஏற்படும்பொழுது உங்களுக்கும் மிகக் குறைவான இழப்பு மட்டுமே நிகழும்.
மியூச்சுவல் ஃபண்ட்கெடுதல்கள்:
- அதிகபட்சமாக நீங்கள் 3 முதல் 5 ஆண்டுகள்வரை முதலீடு செய்தால் மட்டுமே உங்களுக்குச் சிறந்த வருமானம் கிடைக்கும்.
- மியூச்சுவல் பண்ட் பொருத்தவரையில் குறைவான மற்றும் நிலையான(Fixed) லாபம் மட்டுமே கொடுப்பார்கள்.
- பங்குச் சந்தையில் உள்ள கட்டணங்களைப் போலவே இதற்கும் ஒரு சில கட்டணங்கள் இருக்கிறது.
- இவற்றில் உங்களின் நிறுவனங்களை மாற்றிக்கொள்ளும் வசதி கிடையாது.
- உங்களது முதலீட்டைப் பாதியிலேயே நிறுத்த விரும்பினால் அவற்றில் சில இழப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.